உலகம்

இலங்கையில் வறுமையால் 1 கோடி பேர் பாதிப்பு: ஆய்வில் தகவல்

Published On 2022-10-14 08:50 IST   |   Update On 2022-10-14 08:50:00 IST
  • 2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
  • 2019-ம் ஆண்டில் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர்.

கொழும்பு :

இலங்கையை புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்து இருக்கிறது. வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் குறித்து பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்தவகையில் நாட்டில் சுமார் 1 கோடி பேர், அதாவது 96 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் வெறும் சுமார் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வந்த நிலையில், தற்போது அது சுமார் 1 கோடியை எட்டியிருப்பது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதைப்போல நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர், அதாவது 2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் இந்த அவல நிலை ஏற்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தா அதுகோரலா கவலை தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே நாட்டில் நிலவும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கையை சேர்ந்த டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருவது தெரியவந்து இருக்கிறது.

அந்தவகையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 500 டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்கள். இன்னும் 800 பேர் வரை இடம்பெயர காத்திருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்து இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த நிலை தொடரும் என சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரிதா அலுத்கே எச்சரித்து இருக்கிறார்.

60 வயதில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு அளிக்கும் அரசின் முடிவு நிலைமையை மோசமாக்கும் என்று கூறியுள்ள அவர், இந்த நடவடிக்கையை அரசு தொடர்ந்தால் பொது சுகாதார அமைப்பு சுமார் 300 நிபுணர்கள் உள்பட சுமார் 800 மருத்துவர்களை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

சில அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tags:    

Similar News