செய்திகள்
மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அமேசான் அனுப்பிய பார்சல் - வைரலாகும் சம்பவம்
அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். பின் அவருக்கு வழங்கப்பட்ட பார்சலை திறந்து பார்த்ததும், அதில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ந்து போனார். தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.
ரூ. 396 மதிப்புள்ள மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு மே 10 ஆம் தேதி ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை அமேசானுக்கு ட்விட்டர் மூலம் அவர் தெரியப்படுத்தினார். தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண ரசீது வேறொரு வாடிக்கையாளருக்கானது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் ட்விட்டரில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர். பலர் இது குறித்து நக்கலடிக்கும் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.