செய்திகள்
சீன செயலிகளுக்கு தடையா - விளக்கம் அளித்த அரசு ஆணையம்
இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறும் தகவல்களின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தேசிய தகவல் ஆணையம் வெளியிட்டதாக வைரலான தகவல்களில் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள சில சீன செயலிகளுக்கு தடை செய்ய உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டது.
வைரல் தகவல்களில் தேசிய தகவல் ஆணையம், 14 சீன செயலிகளில் பயனர்களின் தனியுரிமைக்கு ஆபத்து மற்றும், இவை நாட்டின் பாதுகாப்புக்கு கலங்கம் ஏற்படுத்தலாம் என்பது போன்ற காரணங்களால் இவற்றை தடை செய்ய கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வட்டார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வைரலான சீன செயலிகள் பட்டியல் போலி என தெரியவந்துள்ளது. வைரல் தகவலை ஆய்வு செய்த பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அமைப்பு வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.
தடை செய்யப்படுவதாக வைரலான செயலிகள் பட்டியலில், லைவ்மி, பிகோ லைவ், விகோ வீடியோ, பியூட்டி பிளஸ், கேம்ஸ்கேனர், கிளாஷ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லெஜண்ட்ஸ், கிளப் ஃபேக்ட்ரி, ஷெயின், ரோம்வி, ஆப்லாக், விமேட் மற்றும் கேம் ஆஃப் சுல்தான் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன. இத்துடன் டிக்டாக் செயலிக்கும் தடை விதிக்க உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.