செய்திகள்

திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஜியோனி நிறுவனம்

Published On 2018-12-21 08:05 GMT   |   Update On 2018-12-21 08:05 GMT
சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி நிறுவனம் திவாலானதாக ஷென்சென் நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Gionee
சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. இந்நிறுவனம் 2013-ம் ஆண்டு முதல் சரிவை சந்திக்க தொடங்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை நிறுவனத்தின் கடன் தொகை 20 ஆயிரம் 300 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைவரான லியு லிரோங் சூதாட்டத்தில் ஆயிரம் கோடியை இழந்து விட்டதாகவும் எனவே அந்நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்குமாறும் ஷென்சென் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜியோனி நிறுவன தலைவர் லியு லிரோங் கூறியதாவது:-

சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தது உண்மை என்றும் ஆனால் நிறுவனத்தின் பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் சூதாட்டத்தில் 144 மில்லியன் டாலர்களை மட்டுமே இழந்தேன். ஜியோனி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 290 கோடி டாலர்களை 648 சிறு நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையாக வழங்க வேண்டி இருந்தது. இந்நிறுவனத்திற்கு கடந்த 2013 முதல் 2015க்குள் மட்டும் சுமார் 1.44 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.

ஜியோனி நிறுவனம் 2002-ம் ஆண்டு ஷென்சென், குவாங்டாங்-கில் தொடங்கப்பட்டது. பிறகு இந்தியா, தைவான், வங்கதேசம், நைஜீரியா, வியட்நாம், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளில் வியாபாரத்தை நீட்டித்தது. #Gionee
Tags:    

Similar News