செய்திகள்

அங்கேயும் இருக்கார்யா நம்மாளு - ரொமாண்டிக் தமிழ் பாடலுடன் பயர்பாக்ஸ் புரவுசர் கொடுத்த பதில்

Published On 2018-09-24 19:51 IST   |   Update On 2018-09-24 19:51:00 IST
மொஸில்லா பயர்பாக்ஸ் ப்ரவுசரை கிண்டல் செய்து போடப்பட்ட மீம்ஸ்க்கு, பயர்பாக்ஸ் ரொமாண்டிக் தமிழ் பாடலுடன் பதில் அளித்துள்ளது. #Firefox #Mozilla

முன்னணி பிரவுசர்களில் ஒன்றான மோஸில்லா பயர்பாக்ஸை கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் இருக்கும் தமிழ்பறவை (@tparavai) என்ற பதிவர் ஒரு மீம்ஸ் பதிவிட்டிருந்தார். ‘மாசிலா உண்மை காதலே’ என்ற பழைய எம்ஜிஆர் படத்து பாடல் வரியை பயன்படுத்தி, “கூகுள் குரோம் பிரவுசர் வேலை செய்யவில்லை என்றால்.. மோஸிலா உண்மை காதலே” என எம்ஜிஆர் பாடுவது போல மீம்ஸ் உருவாக்கி பதிவு செய்திருந்தார்.

இந்த மீம்ஸை கேசவன் முத்துவேல் (@kesavan2000in) என்பவர் மோஸில்லா பயர்பாக்ஸ் ட்விட்டர் கணக்குடன் இணைத்து டேக் செய்திருந்தார். இதற்கு பயர்பாக்ஸ் நிறுவனம் ஐ படத்தின் பாடலுடன் பதில் கூறியுள்ளது.

“உண்மை காதல் யாரென்றால் தமிழ்பறவையும் பயர்பாக்ஸையும் சொல்வேனே.. பயர்பாக்ஸ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. லாபத்துக்காக அல்ல. சமீபத்தில் வெளியிடப்பட்ட பயர்பாக்ஸ் வெர்சனை பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன்” என பதில் அளிக்கப்பட்டுள்ளது.



பயர்பாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் யாரோ ஒரு தமிழர்தான் இந்த பதிலை அனுப்பி இருக்க கூடும் என பலரும் புன்னகையுடன் இந்த பதிலை ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News