செய்திகள்

வாட்ஸ்அப்-க்கு போட்டியாக பதஞ்சலி களமிறக்கிய கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் மாயம்

Published On 2018-05-31 10:24 GMT   |   Update On 2018-05-31 10:24 GMT
பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்-க்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய கிம்போ என்ற பெயரிலான ஆப் சிலமணி நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. #KimbhoApp
புதுடெல்லி:

பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக கிம்போ என்ற பெயரில் இன்று ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

ஸ்வதேசி (உள்நாட்டு தயாரிப்பு) ஆப் என்ற பில்டப் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், போலோ என்ற பெயரில் ஏற்கனவே இருந்த ஒரு செயலியின் கோடிங்கை நகலடித்து கிம்போ உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக கிம்போ ஆப் இன்ஸ்டால் செய்ததும் ஒன் டைம் பாஸ்வேர்ட் மெசேஜ் உங்களது மொபைலுக்கு வரும். ஆனால், அந்த மெசேஜ்-ல் கூட போலோ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பலர் கிம்போ செயலியை கலாய்த்து வருகின்றனர்.

போலோ செயலியானது பாதுகாப்பு இல்லாதது என பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதனால் போலோவின் அம்சங்களை காபி அடித்து உருவாக்கப்பட்டுள்ள கிம்போ-வும் பாதுகாப்பு இல்லாதது, உங்களது தகவல்கள் பொதுவெளியில் விடப்படலாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து மாயமானது. ஆனால், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன. 
Tags:    

Similar News