செய்திகள்
2018-இல் மட்டும் நான்கு புதிய ஐபோன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்?
2018-ம் ஆண்டில் மட்டும் நான்கு புதிய ஐபோன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் நான்கு புதிய ஐபோன்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக டிஜிடைம்ஸ் நிறுவன மூத்த ஆய்வாளர் லூக் லின் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஐபோன்களும், OLED டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஐபோன்கள் என மொத்தம் நான்கு ஐபோன்களை ஆப்பிள் வெளியிட இருப்பதாக லூக் லின் தெரிவித்துள்ளார்.
இதில் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஐபோன்களும் முறையே 5.7 - 5.8 அல்லது 6.0 - 6.1 இன்ச் டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கலாம் என்றும் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களில் 6.0 - 6.1 இன்ச் அல்லது 6.4 - 6.5 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் 6.0 இன்ச் ஸ்கிரீன் கொண்ட OLED ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடாது என டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஐபோன் 8 சீரிஸ் போன்று இரண்டு ஐபோன்களில் எல்.சி.டி. பேனல்களும், ஐபோன் X போன்ற OLED சார்ந்த ஸ்கிரீன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 3D சென்சிங் அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்திய தகவல்கள் பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களை சார்ந்து வெளியாகி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை வெளியிடலாம் என்றும் இவற்றில் இரண்டு ஐபோன்களில் OLED ரக டிஸ்ப்ளேவும், ஒரு ஐபோனில் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
மிங் சி கியோ வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன்களில் OLED ஸ்கிரீன் கொண்டவை 5.8 இன்ச் (புதிய ஐபோன் X) மற்றும் 6.5 இன்ச் (ஐபோன் X பிளஸ்) கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்ட மாடலில் 6.1 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இது ஐபோன் எஸ்.இ. 2 என அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதிய ஐபோன் எஸ்.இ. 2 பிரீமியம் பிரிவில் சற்றே விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஐபோன் X ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் அரையாண்டு வாக்கில் விற்பனை நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சீனா போன்ற சந்தைகளில் புதிய ஐபோன் X விற்பனை மந்தமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனினும் சீனாவில் மட்டும் இதுவரை 70 லட்சம் ஐபோன் X விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.