செய்திகள்

என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர்: விரைவில் வெளியிட ஆப்பிள் திட்டம்

Published On 2018-01-23 16:47 IST   |   Update On 2018-01-23 16:47:00 IST
ஆப்பிள் நிறுவனம் 13.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் நோட்புக்-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் அதிக பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் ரூ.55,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் மேக்புக் ஏர் விற்பனை மேலும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அந்நிறுவனம் புதிய மேக்புக் ஏர் நோட்புக்களை அறிமுகம் செய்தது. புதிய மேக்புக் ஏர் மாடல்களில் பிராசஸர் வேகம் 1.6 ஜிகாஹெர்ட்ஸ்-இல் இருந்து 1.8 ஜிகாஹெர்ட்ஸ்-ஆக ஆப்பிள் நிறுவனம் அதிகரித்தது. 

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 13.3 இன்ச் அளவு கொண்ட என்ட்ரி-லெவல் மேக்புக் சாதனத்தை அறிமுகம் செய்து தற்போதைய மேக்புக் ஏர் சாதனத்திற்கு மாற்றாக விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ட்ரி-லெவல் 13 இன்ச் மேக்புக் ஏர் இந்த ஆண்டின் இரணாடம் பாதியில் வெளியிடப்படலாம் என டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மேக்புக் சாதனத்தில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் இவற்றை ஜெனரல் இன்டர்ஃபேஸ் சொல்யூஷன் (GIS) விநியோகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. 



கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஜெனரல் இன்டர்ஃபேஸ் சொல்யூஷன் நிறுவனம் எல்.சி.டி. டிஸ்ப்ளேக்களை விநியோகம் செய்யும் பணிகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக மேக்புக் ஏர் சாதனங்களுக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் தனது முதல் 12.0 இன்ச் மேக்புக் சாதனத்தை அறிமுகம் செய்தது. எனினும் மேக்புக் ஏர் விற்பனை 12 இன்ச் மேக்புக்களை விட அதிகமாக நடைபெற்றன. இதற்கு மேக்புக் ஏர் விலையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்சமயம் ஆப்பிள் வழக்கமான சிக்னேச்சர் ஸ்டைல் வடிவமைப்புகளில் உருவாகி இருக்கும் மேக்புக் ஏர், அந்நிறுவனத்தின் ரெட்டினா டிஸ்ப்ளே இல்லாத ஒரே சாதனமாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த சாதனத்தின் பிராசஸர் மட்டும் ஆப்பிள் சார்பில் மேம்படுத்தப்பட்டது.

இந்நிலையில் புதிய மேக்புக் ஏர் எவ்வாறு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஆப்பிள் விற்பனை செய்து வரும் தற்போதைய மாடல்களை விட புதிய மாடல்களில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால மேக்புக் சீரிஸ்களில் ஆப்பிள் நிறுவனம் ஃபுல் ஸ்கிரீன் OLED டிஸ்ப்ளேக்களை வழங்கி, என்ட்ரி-லெவல் சாதனங்களில் எல்.சி.டி. டிஸ்ப்ளேக்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News