முதியவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமை தொகை- பணத்தை மீட்டு தர பெண் கோரிக்கை
- முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார்.
- அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி, காஞ்சி பெரியவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு கண்ணன், மகேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் முருகேஸ்வரி கடந்த ஆண்டு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து இருந்தார். தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு உங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீங்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதற்கிடையே முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார். ஆனால் முருகேஸ்வரி வங்கிக் கணக்கின் கடைசி எண்ணை தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 14 மாதங்களாக அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள காணப்பாடியைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது.
பின்னர் அந்த முதியவர் முதல் 3 மாதங்கள் மட்டும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து முருகேஸ்வரியிடம் கொடுத்தார். அதன்பின்னர் அவர் பணத்தை தரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி மகளிர் உரிமை தொகை பணத்தை மீட்டு தருமாறு முருகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.