தமிழ்நாடு செய்திகள்

வீடு இடிந்து பெண்கள் பலி: ரூ.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

Published On 2025-10-22 15:38 IST   |   Update On 2025-10-22 15:38:00 IST
  • வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.
  • தாய், மகள் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா. இன்று காலை அசோதை மற்றும் ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இன்று காலை திடீரென்று அசோதை வீட்டின் மேற்கூரை இடிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார் .

இவர்களது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News