தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் மகா தீபத்திற்கு மலை ஏற அனுமதி அளிக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2025-11-28 07:54 IST   |   Update On 2025-11-28 07:54:00 IST
  • கடந்த ஆண்டு மகா தீபம் காட்சி அளிக்கும் 11 நாட்களும் மலை ஏற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான மகா தீபம் வருகிற 3-ந் தேதி ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். வழக்கமாக மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியின் போது அண்ணாமலையார் மலை மீது ஏறி சென்று தீப தரிசனம் காண சுமார் 2,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கன மழையினால் அண்ணாமலையார் மலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை வ.உ.சி.நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரே வீட்டில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பல தெருக்களில் மண் சரிவினால் மண்ணும், கற்களும் அடைத்து பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறையினர் மூலம் ஆய்வு செய்து மலையின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு மகா தீபம் காட்சி அளிக்கும் 11 நாட்களும் மலை ஏற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான மகா தீபம் வருகிற 3-ந் தேதி ஏற்றப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வுகள் நடத்தி வருகிறது. மேலும் மழை பொழிவை பொருத்தும், மலையில் உள்ள மண்ணின் உறுதி தன்மையை பொருத்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு இந்த ஆண்டு மகா தீபத் தரிசனத்திற்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கலாமா, இல்லையா என்பது குறித்து மகா தீபத்தையொட்டி தெரிவிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் வருகிற 30-ந்தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகா தீபத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது வரை மழை பெரிய அளவில் பெய்யாததால் இந்த ஆண்டு மகா தீபத்திற்கு மலை ஏற அனுமதி அளிக்கப்படுமா? என்று உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மகா தீபத்திற்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி உண்டா, இல்லா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News