குன்னூர்- மேட்டுப்பாளையம் ரோட்டில் மலையேறி வனத்துக்குள் சென்ற காட்டு யானை
- சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.
- கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வனத்துக்குள் சென்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், முள்ளி உள்ளிட்ட பகுதியில் இருந்து 23 காட்டு யானைகள் இடம்பெயர்ந்து குன்னூர் பகுதியில் தனித்தனி குழுவாக நடமாடி வருகிறது.
ஊட்டியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பன் தற்போது தொட்டபெட்டா பகுதிக்கு சென்று லவ்டேல் பகுதியில் நடமாடி வருகிறது.
இந்த நிலையில் சமவெளி பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று மாலை குன்னூருக்கு வந்தது. பின்னர் அந்த ஒற்றை யானை சாலையோரம் வழியாக சென்று அங்குள்ள செங்குத்தான மலைச்சரிவில் ஏறி வனத்துக்குள் சென்றது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை வேகமாக மலையேறி செல்வதை அங்குள்ள சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் காட்டு யானைகள் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருவதால் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர்.