தமிழ்நாடு செய்திகள்

உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2025-06-07 11:05 IST   |   Update On 2025-06-07 11:05:00 IST
  • அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
  • அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 82 அடி உள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை பாசன வசதிக்குட்பட்ட 8 பழைய ராஜ வாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை அமராவதி அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், ஈஸ்வரசாமி எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 58 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்று அடிப்படையில் விநாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 82 அடி உள்ளது. நீர்வரத்து 374 கனஅடி உள்ளது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News