தமிழ்நாடு செய்திகள்

பேச்சிப்பாறை-பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2025-10-17 13:56 IST   |   Update On 2025-10-17 13:56:00 IST
  • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
  • கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் நீடித்தது. நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று இரவு விட்டுவிட்டு சாரல் மழை பெய்து. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி,குழித்துறை, கோழிப்போர்விளை, குளச்சல், இரணியல், தக்கலை பகுதிகளில் இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. மோதிரமலை, தச்சமலை பகுதிகளிலும் மழை பெய்தது.

பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஏராளமான மரங்கள் முறிந்துவிழுந்தன. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி தேங்கியது.

மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. பாலமோரில் அதிகபட்சமாக 55.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.64 அடியாக இருந்தது. அணைக்கு 1,164 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 361 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.78 அடியாக உள்ளது. அணைக்கு 1,224கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 285 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 14 அடி எட்டியது.

தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் மற்றும் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழைக்கு வீடு ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் மழை பெய்தபடியே இருப்பதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.

Tags:    

Similar News