தமிழ்நாடு செய்திகள்

மழை ஓய்ந்ததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு

Published On 2025-11-02 12:12 IST   |   Update On 2025-11-02 12:12:00 IST
  • தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கனஅடியாக குறைக்கப்பட்டது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது.

கூடலூர்:

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் மத்தியில் தொடங்கியபோது கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் அணைகள், ஆறு, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. மேலும் ரூல்கர்வ் நடைமுறையால் உபரியாக கேரளாவுக்கு தண்ணீர் வீணாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 333 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 400 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 137.65 அடியாக உள்ளது. 6533 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.11 அடியாக உள்ளது. 1823 கனஅடி நீர் வருகிற நிலையில் 1499 கனஅடி நீர் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. அணையில் 5601 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 139 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 51.80 அடியாக உள்ளது. 4 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News