முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கவேண்டும் - எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்!
- திராவிட மரபின் சாம்பியன் கருணாநிதி.
- இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன்,
"உலகில் முத்தழிழ் அறிஞர் கருணாநிதி போன்ற ஆளுமையை காண்பது அறிவு. மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். திராவிட மரபின் சாம்பியன் கருணாநிதி. சமூக நீதிக்கும், நல்லாட்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, 'இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்' என்று புகழ்ந்தார். அது கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும்.
தஞ்சாவூர் கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராதவர். அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர். அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர், நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை." என தெரிவித்தார்.