தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் மகாதீபம் ஏற்றக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

Published On 2025-12-13 11:12 IST   |   Update On 2025-12-13 12:05:00 IST
  • போராட்டத்தை வீடியோ மூலமாக முழுமையாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.
  • திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பேர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 3-ந்தேதி கோவில் நிர்வாகம் சார்பில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து இந்து அமைப்பினர் தடையை மீறி மலைக்கு செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து அனுமதி மறுத்தனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் மலைக்கு செல்லும் பாதைகளில் கடந் ஒரு வாரத்திற்கும் மேலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தும் வகையில் இன்று (சனிக்கிழமை) உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்குமாறு திருப்ப ரங்குன்றம் ஊர் மக்கள் சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு போராட்டத்திற்கு அனுமதி அளித்தது. மேலும் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கிராம மக்கள் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் அரசியல் பேசக்கூடாது, பக்தி பாடல்களை மட்டும் படிக்க வேண்டும்.

போராட்டத்தை வீடியோ மூலமாக முழுமையாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. இதனை தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணியளவில் தொடங்கியது. இதில் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தினர். முருகனின் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. உண்ணாவிரதத்ததை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News