தமிழ்நாடு செய்திகள்

திருத்தணி கோவில் மலைப்பாதையில் 2 நாட்கள் வாகனங்களுக்கு தடை

Published On 2025-09-01 12:40 IST   |   Update On 2025-09-01 12:40:00 IST
  • மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள்.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு கார், பஸ், வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் செல்வது வழக்கம். வாகனங்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி -அரக்கோணம் சாலையில் இருந்து மலைப்பாதை உள்ளது.

இந்த ஒரே பாதையில் அனைத்து வாகனங்களும் மலைக்கோவிலுக்கு சென்று வருவதால் கடந்தசில மாதங்களாக சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலைக்கோவில் பாதையில் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெறும் இந்த பணி நாளை வரை நடக்கிறது.

இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல இன்றும், நாளையும் என 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மட்டும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதனால் கோவில் பஸ்சில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) மலைக்கோவிலுக்கு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பக்தர்கள் வசதிக்காக 4 பஸ்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. பிற எந்தவித வாகனங்களுக்கும் மலைப்பாதையில் செல்வதற்கு இன்றும் நாளையும் அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News