தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு- வீராணம் ஏரி நிரம்பியது
- சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
- ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும்.
இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 756 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வீராணம் ஏரிக்கு செங்கால், கருவாட்டு ஓடைகள் வழியாக வினாடிக்கு 1,365 கன அடி நீர் வருகிறது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 45.50 அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி இதற்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதாலும், மழைக்காலம் என்பதாலும் ஏரியில் இருந்து உபரி நீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக வினாடிக்கு 1,570 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.