தமிழ்நாடு செய்திகள்

வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியது- உபரி நீர் வெளியேற்றம்

Published On 2025-08-25 12:30 IST   |   Update On 2025-08-25 12:30:00 IST
  • வீராணம் ஏரியில் இருந்து சென்னை மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கிறது.
  • கடந்த 2 மாதத்திற்குள் 3 முறை முழு கொள்ளளவு நிரம்பியதால் சுற்றியுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

சேத்தியாதோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் தொடங்கி காட்டுமன்னார் கோவில் லால்பேட்டை வரையில் 14 கி.மீ. நீளம் கொண்டது வீராணம் ஏரி.

இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும், 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படுகிறது.

வீராணம் ஏரி மூலம் டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார் கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் வட்டாரங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வீராணம் ஏரியில் இருந்து சென்னை மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கிறது.

கோடையில் வரலாறு காணாத வகையில் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி வீராணம் ஏரி முழு கொள்ளளவு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த 2 மாதத்திற்குள் 3 முறை முழு கொள்ளளவு நிரம்பியதால் சுற்றியுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கீழ் கொள்ளிடம் அணைக்கரையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வடவாற்றில்1,527 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக வீராணம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவு நிரம்பியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி லால்பேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூதங்குடி வி.என்.எஸ். மதகு ஷட்டர்களை திறந்து வினாடிக்கு 5,683 கன அடி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைக்கும் பணியில் சேத்தியாதோப்பு வெள்ளாறு பாசன பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News