63 அடியை நெருங்குகிறது வைகை அணை நீர்மட்டம்
- அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்பிடிப்பு பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததாலும் வைகை அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து கடந்த 15-ந்தேதி மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு 900 கனஅடி, மதுரை மாநகர குடிநீருக்கு 69 கனஅடி என மொத்தம் 969 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இருந்த போதும் அணைக்கு 1565 கனஅடி நீர் வருவதால் நீர்மட்டம் 62.30 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் 4057 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டுமா என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்பிடிப்பு பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.15 அடியாக உள்ளது. 3147 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.5200 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 83.31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை நீர்மட்டம் 46.10 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
வீரபாண்டி 1.4, உத்தமபாளயைம் 1.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 18.2, தேக்கடி 6.2, சண்முகாநதி 1.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.