தமிழ்நாடு செய்திகள்

பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Published On 2025-07-30 13:02 IST   |   Update On 2025-07-30 13:02:00 IST
  • இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
  • வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை:

சென்னை பள்ளிக்கரணையில், வேளச்சேரி மெயின்ரோடு மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பில், காமாட்சி மருத்துவமனை அருகே சில மாதங்களுக்கு முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்து சில நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் மூலம் அந்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

இந்த நிலையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் சமீப காலமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை - விநாயகபுரம் மெயின்ரோடு ஆகிய 2 சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி போக்குவரத்து போலீசார் சில மாற்றங்களை செய்தனர்.

மேலும் ரேடியல் சாலையில் 'யு' வளைவில் திரும்புவதற்கும் ஏற்பாடுகளை செய்தனர். இதன் மூலம் தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல முடிகிறது. இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் சிக்னல் சந்திப்புகளில் வாகன நெரிசலை குறைத்திருந்தாலும், சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள் தவறான திசையில் வாகனம் ஓட்டி செல்வது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள் வாகன நெரிசலை குறைத்துள்ளன. ஆனால் அருகில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வது அதிகரித்துள்ளது. நீண்ட தூரம் செல்வதை தவிர்க்க அவர்கள் யு வளைவின் வழியாக தவறான திசையில் வாகனங்களில் செல்கிறார்கள்.

வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News