தமிழ்நாடு செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

Published On 2025-06-28 12:20 IST   |   Update On 2025-06-28 12:20:00 IST
  • சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
  • கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் முழுமையாக இருக்கும்.

இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

தற்போது கேரளாவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது.

தொடர் தடைக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதனால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதியில் அமைந்திருக்கும் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால் அதனை போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி உள்ளன. மேலும் சிற்றாற்று தண்ணீர் மூலம் பல்வேறு குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் அதனை நம்பி விவசாய பணியிலும் விவசாயிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர். 

Tags:    

Similar News