SIR படிவங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்
- தமிழகத்தில் எஸ்ஐஆர் களப்பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
- எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, இந்த பணிகளுக்கான கால அளவை தேர்தல் ஆணையம் மேலும் நீட்டித்தது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடந்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த பணி நடக்கிறது. 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இறந்த வாக்காளர்களின் பெயர்கள், இரட்டை பதிவில் உள்ளவர்களை நீக்கவும் தேர்தல் கமிஷன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் களப்பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இந்த பணியின்போது வீடுவீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இந்தப்பணிகள் கடந்த 4-ந் தேதி முடிவடைவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தேதியை 11-ந் தேதி வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, இந்த பணிகளுக்கான கால அளவை தேர்தல் ஆணையம் மேலும் நீட்டித்தது.
அதன்படி தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கி பதிவேற்றம் செய்யும் பணிக்கான கால அளவை 14-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பான எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.
கடைசி நாளான நாளை எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.