தமிழ்நாடு செய்திகள்

தேடுதல் குழுவில் யு.ஜி.சி. உறுப்பினரை சேர்க்க வலியுறுத்தல்- கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

Published On 2025-01-17 10:41 IST   |   Update On 2025-01-17 12:04:00 IST
  • இதே விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது மீண்டும் கவர்னரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.
  • புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

சென்னை:

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதற்காக தேடுதல் குழுவில் யு.ஜி.சி. உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தி வருகிறார்.

இது விதிகளுக்கு எதிரானது என கூறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வேறு காரணங்களுக்காக வழக்கின் விசாரணை நடைபெறவில்லை.

இந்த நிலையில் இதே விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களின் பணி நீட்டிப்பு காலமும் வரும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ள சூழலில், ஏற்கனவே செய்தது போலவே பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில்சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

ஏற்கனவே இதே விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது மீண்டும் கவர்னரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.

எனவே இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும் போது, இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News