தமிழ்நாடு செய்திகள்

கைதான ராஜேஷ் கண்ணா

நடத்தையில் சந்தேகம்... செவிலியர் கொலையில் கைதான கணவன் வாக்குமூலம்

Published On 2025-05-02 12:07 IST   |   Update On 2025-05-02 12:07:00 IST
  • எனக்கும் சித்ராவுக்கும் சொந்த ஊர் மதுரைதான்.
  • சித்ராவின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்தார்.

திருப்பூர்:

மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 30). இவரது மனைவி சித்ரா(27). இவர்களுக்கு 9 வயதில் மகள், 1½ வயதில் மகன் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே, சித்ரா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் திருப்பூரில் வேலை பார்த்து வந்த தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

மேலும் சித்ரா திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பல் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக செவிலியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் சித்ரா தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சித்ராவை அவரது கணவர் ராஜேஷ்கண்ணா தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் இருந்து மதுரைக்கு தப்பி சென்ற ராஜேஷ் கண்ணாவை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மனைவி சித்ராவை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும் சித்ராவுக்கும் சொந்த ஊர் மதுரைதான். இதனால் இருவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தோம். 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் காதலித்து திருமணம் செய்ததால் எங்களது 2 குடும்பத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக எங்கள் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் நான் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தேன். மேலும் சித்ராவின் உறவினர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால் சந்தேகப்பட்டேன். இதனால் சித்ரா அவரது உறவினர்கள் யாரையும் வீட்டிற்கு அழைத்து வராமல் இருந்து வந்தார். இது எங்களுக்குள் பிரச்சனையை அதிகப்படுத்தியது.

தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் சித்ரா என் மீது கோபப்பட்டு திருப்பூரில் வேலை பார்த்து வந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்று விட்டார். சித்ரா பிரிந்து சென்றதால் மிகவும் கவலையடைந்தேன்.

அவரை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்ததுடன், கருத்தடையும் செய்து கொண்டார். ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் வர மறுத்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நானே திருப்பூர் சென்றேன். அங்கு சித்ராவிடம் நான் இனிமேல் தகராறு செய்யமாட்டேன். நாம் மதுரைக்கு குழந்தைகளுடன் சென்று வாழ்வோம் என தெரிவித்தேன். அதற்கு சித்ரா கொஞ்ச நாள் கழித்து செல்வோம் என தெரிவித்தார். இது எனக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

இதையடுத்து 3 நாட்களாக திருப்பூரில் சித்ராவுடன் இருந்தேன். குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்று வந்தோம். இதனிடையே சித்ராவின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்தார். சந்தேகமடைந்த நான் சித்ராவின் செல்போனை பார்த்தபோது அதில் வாலிபரின் புகைப்படங்கள் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வர நேரமாகும் என்றதால் நான் ஆஸ்பத்திரிக்கு சென்று சித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். பின்னர் மாமனார்-மாமியாரிடம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி விட்டு வருகிறோம் என்று கூறி விட்டு 2 பேரும் வெளியே சென்றோம்.

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடையில் குழந்தைகளுக்கு தேவையான இனிப்புகளை வாங்கி கொண்டு திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி பின்புறம் உள்ள மாமனார் வீட்டிற்கு சித்ராவுடன் சென்றேன். தோளில் கையை போட்டு இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு சென்றோம்.

அப்போது வாலிபருடனான தொடர்பு குறித்து சித்ராவிடம் கேட்டேன். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் சித்ராவை சரமாரி தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்திற்கு சித்ராவை தூக்கிச்சென்று தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தேன்.

போலீசாருக்கு அடையாளம் தெரியாமல் இருக்க கல்லால் சித்ராவின் முகத்தை சிதைத்தேன். பின்னர் திருப்பூரில் இருந்து பஸ் ஏறி மதுரைக்கு சென்றேன். ஆனால் போலீசார் நாங்கள் சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதை வைத்து என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News