தமிழ்நாடு செய்திகள்
மசினகுடி அருகே வனத்துறை கண்காணித்து வந்த புலி உயிரிழப்பு
- வேட்டையாட முடியாத நிலையில், போதிய இரை கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது.
- புதருக்குள் 12 வயதான பெண் புலி படுத்து கிடப்பதும், பின்னர் வெளியே வந்து விட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக இருந்தது.
கூடலூர்:
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி அருகே சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பழைய கல்குவாரியில் வயதான புலி சுற்றி வந்தது. மேலும் வேட்டையாட முடியாத நிலையில், போதிய இரை கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி முதல் சிங்காரா வனச்சரகர் தனபால், வனவர் சங்கர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதே பகுதியில் உள்ள புதருக்குள் 12 வயதான பெண் புலி படுத்து கிடப்பதும், பின்னர் வெளியே வந்து விட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று புலி இறந்து கிடந்ததை வனத்துறையினர் பார்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இன்று புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றனர்.