அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர்.. உண்மையான அக்கறை இருந்தால்.. அன்பில் மகேஷ் விடுத்த சவால்!
- நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
- டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில், ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே..
ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, "நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்" என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது.
கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி "தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?" என்று கேளுங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.