தஞ்சை சமுத்திரம் ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளதால் கடல்போல் காட்சியளிக்கிறது.
தொடர்மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - தஞ்சை மாவட்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
- வடகிழக்கு பருவமழையை பொறுத்தே ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து இருக்கும்.
- தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 641 ஏரிகளில் இதுவரை 19 ஏரிகள் 100 சதவீதம் நிறைந்துள்ளன.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு உபரி நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்தது. இதனால் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது.
பொதுவாக மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆற்று பாசனத்தை ஏரிகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் நீர் வரத்து இருப்பது வழக்கம். குறிப்பாக வடகிழக்கு பருவமழையை பொறுத்தே ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து இருக்கும்.
ஆனால் தஞ்சை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையும் சீராக பெய்து வருகிறது. கடந்த மாதம் 1-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை சராசரியாக 138.4 மி.மீ. என்கிற இயல்பான அளவை விஞ்சி 177.1 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது இயல்வை விட 28 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
இதனால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் கடந்த மாதத்தில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்று பாசனத்தை சேர்ந்த ஏரிகளுக்கு தண்ணீர் வந்தது.
தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 641 ஏரிகளில் இதுவரை 19 ஏரிகள் 100 சதவீதம் நிறைந்துள்ளன. மேலும் 132 ஏரிகளில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையும், 133 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதம் வரையும், 211 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரையும், 122 ஏரிகளில் 25 சதவீதத்துக்குள்ளும் தண்ணீர் உள்ளது. இருந்தாலும் 24 ஏரிகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆற்று பாசனம் சார்ந்த 737 ஏரிகளில் சுமார் 56 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தற்போது சாகுபடிக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் ஏரிகளில் நீர்மட்டம் குறைகிறது. சில ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இருந்தாலும் அடுத்து பெய்யும் மழை மற்றும் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் போது ஏரிகளில் நீர்மட்டம் உயரவும், வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவும் வாய்ப்புள்ளது என்றனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்துள்ளதால் சாகுபடி பணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆழமாக இருந்த நிலையில் தற்போது உயர்ந்து 20 அடி ஆழத்துக்கு வந்து விட்டது. இதனால் இந்த ஆண்டு ஏரியை சார்ந்த வயல்களிலும் சாகுபடி பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளன. என்றாலும் காவிரி நீர்வரத்தும், மழையும் சீராக இருந்தால் தான் ஏரிகளில் நீர்மட்டம் குறையாமல், சாகுபடிக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.