தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: சாத்தியமா? சவாலா? - ப.சிதம்பரம் கருத்து!

Published On 2026-01-04 16:36 IST   |   Update On 2026-01-04 16:36:00 IST
  • தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும்
  • நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) இணையான பலன்களை வழங்கக்கூடிய "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன்படி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தின் அடிப்படையில், 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். ஊழியர்கள் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பங்களிப்பாக வழங்குவார்கள். மீதமுள்ள கூடுதல் நிதித் தேவையை முழுமையாகத் தமிழக அரசே ஏற்கும்.

ஓய்வூதியதாரர் காலமானால், அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% தொகை அவரது குடும்பத்தினருக்கு (வாரிசுதாரர்களுக்கு) குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் போன்றவை அடங்கும். இந்த வாக்குறுதி நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், தமிழ்நாடு அரசுக்கு பெரும் நிதிச்சுமையை அளிக்கும் என பலதரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

"தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே.

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம். செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News