தமிழ்நாடு செய்திகள்

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Published On 2025-05-22 09:27 IST   |   Update On 2025-05-22 09:27:00 IST
  • கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
  • காட்டுமன்னார் கோவில் பகுதியில் வடவாற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் நிரம்பி செல்கிறது.

காட்டுமன்னார் கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இந்த ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 756 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

கோடை காலத்தில் ஏரியில் குறைந்த அளவு நீர் இருந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனல் கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் வடவாறு வழியாக வினாடிக்கு 1,900கன அடி வீதம் அனுப்பப்படுகிறது. இதனால் காட்டுமன்னார் கோவில் பகுதியில் வடவாற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் நிரம்பி செல்கிறது.

கீழணையின் மொத்த உயரம் 9 அடியாகும். தற்போது 5.5 அடிக்கு நீர் உள்ளது. கல்லணையில் இருந்து கீழணைக்கு வரும் உபரி நீரில் 1,920 கன அடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வெளியேற்றப்படுகிறது.

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50அடியாகும். இதில் தற்போது 44.10 அடி நீர் உள்ளது.

உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை சார்பில் வடவாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News