திடீரென சூழ்ந்த கருமேகம்... சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
- இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருந்தது.
காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூரில் 13ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரும் 14, 15ம் தேதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.