தமிழ்நாடு செய்திகள்

தவறான சிகிச்சையில் மாணவி உயிரிழப்பு- தனியார் மருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் அபராதம்

Published On 2025-04-17 14:44 IST   |   Update On 2025-04-17 14:44:00 IST
  • பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர்.
  • ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கனூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்-காவேரி தம்பதியின் மகள் நந்தினி (வயது 14). இவர் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காதில் கட்டி ஏற்பட்டு வலி இருந்து வந்தது.

இதனால் கடந்த 9.10.2021 அன்று நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மல்டி லெவல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், முன் பணமாக ரூ.20 ஆயிரம் கட்டுமாறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு காதில் இருந்து தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர். தங்கள் மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் தரப்பில் வக்கீல்கள் ஆரோக்கிய செல்வரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் வாதாடினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் குறைதீர் ஆணைய தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்தது உறுதியானதால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம், டாக்டர் நாச்சிமுத்து ரூ.4 லட்சம், டாக்டர்கள் சுதாகர், தீபக் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் செலுத்திய ரூ.20 ஆயிரம் பணத்துடன் சேர்த்து 2 மாதத்துக்குள் வழங்காவிட்டால் 12 சதவீத வட்டியுடன் வழங்க நேரிடும் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News