தமிழ்நாடு செய்திகள்

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-04-17 11:37 IST   |   Update On 2025-04-17 11:37:00 IST
  • இந்த வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.
  • தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை:

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலணியில் உள்ள கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை சென்னை மேயராக இருந்த போது மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணங்கள் தயாரித்துதல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், நிலஅபகரிப்பு வழக்கு இன்று மீண்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றம் அவரது மனைவி காஞ்சனா இருவரும் ஆஜராகவில்லை. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமைச்சரவை கூட்டம் நடப்பதால் இன்று விசாணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் மே மாதம் 6-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் அன்றைய தினம் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி ஜெயவேல் தெரிவித்தார். 

Tags:    

Similar News