தமிழ்நாடு செய்திகள்

ஜெயில் கைதி தயாரித்த சோலார் மின்சார ஆட்டோ- ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 200 கி.மீ. வரை செல்ல முடியும்

Published On 2024-12-08 11:15 IST   |   Update On 2024-12-08 11:15:00 IST
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார்.
  • 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

கோவை:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (வயது 32). ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர். இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் கடந்த 7 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

மத்திய ஜெயில் தொழிற்கூடத்தில் பணியாற்றி வரும் யுகஆதித்தன் கையில் கிடைக்கும் சாதனங்களை கொண்டு பயன்பாடு உள்ள பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் உடையவர்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார். இது சிறை அதிகாரிகள் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றது.

இந்த நிலையில் யுகஆதித்தன் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் ஆட்டோவை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


கோவை மத்திய சிறையில் சமையற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஆட்டோவை சோதனை பயன்பாடு முடிந்த பிறகு ஜெயில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களில் வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் அமர்ந்து செல்லும்வகையில் நுழைவுவாயிலில் இருந்து பார்வையாளர் அறை வரை பயன்படுத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் கூறியதாவது:-

ஜெயில் கைதி யுகஆதித்தன் உருவாக்கி உள்ள சோலார் ஆட்டோவின் மீது சூரியஒளி மின்உற்பத்திக்காக தகடு பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆட்டோவில் டிரைவர் இருக்கைக்கு அடியில் பேட்டரி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மேற்கண்ட ஆட்டோவில் ஒருமுறை பேட்டரி முழுவதுமாக நிரம்பினால் 200 கி.மீ. வரையிலும் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதில் டிரைவர் உள்பட 8 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம்.

மேலும் எல்.இ.டி. விளக்கு, ஹாரன், ஹேண்ட் பிரேக், டேப் ரிக்கார்டர் போன்ற வசதிகளும் உள்ளன.

ரூ.1.25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ஆட்டோ தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மேலும் 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News