ராஜபாளையம் அருகே விசைத்தறி உற்பத்தியாளர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
- போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் இந்தியா முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகள், மற்றும் அமெரிக்க ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, ஆசியா நாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த தொழிலை நம்பி இந்தப்பகுதியில் நேரடியாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் உள்ளது.
தற்போது ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு நெசவு செய்யும் தொழில் கூடங்களுக்கு கூலி உயர்வு வழங்காத நிலையில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழில் ஈடுபடக்கூடிய விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் இந்த தொழில் சார்ந்த மறைமுக தொழிலில் ஈடுபடக் கூடியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கி விசைத்தறி கூடங்களை இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும் என தொழிற் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கும் ஏற்று மதியாளர் மற்றும் விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி கூட அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டால் மீண்டும் இப்பகுதியில் பேண்டேஜ் தொழில் புத்துயிர் பெறும் என சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.