கச்சத்தீவு விவகாரத்தில் இந்திரா காந்தி தவறு செய்துவிட்டதாக பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்- செல்வப்பெருந்தகை
- இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தபோது 285 ஏக்கர் நிலத்தை கொடுத்து விட்டு 6500 கி.மீ. பரப்பளவை அவர் இந்திய நாட்டுக்கு வாங்கி கொடுத்தார்.
- தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
கச்சத்தீவு விவகாரத்தில் வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டு பலர் இங்கு பேசி இருக்கிறார்கள். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை துர்காதேவி என்று பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாயே புகழ்ந்துள்ளார். இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தபோது 285 ஏக்கர் நிலத்தை கொடுத்து விட்டு 6500 கி.மீ. பரப்பளவை அவர் இந்திய நாட்டுக்கு வாங்கி கொடுத்தார். இங்கு பேசியவர்கள் போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை மட்டுமே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார். மீனவர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என்று சொன்னார்கள்.
ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
செல்வப்பெருந்தகை தனது பேச்சின்போது மறைந்த தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் பேசினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை குறிப்பில் இருந்து அதை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து முக்கியமான தீர்மானத்தின் மீது நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். பா.ஜ.க. கட்சியும் இந்த தீர்மானத்தை ஆதரித்து உள்ளது. எனவே இதில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றார்.
இதைத்தொடர்ந்து செல்வப்பெருந்தகை குறிப்பிட்ட ஒரு கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. செல்வப்பெருந்தகையின் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட அ.தி.மு.க.வினர் அதன் பிறகு அமைதியானார்கள்.