தேர்தலில் போட்டியிட 130 துடிப்பான இளைஞர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்த சீமான்
- ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திவிரமாக தயாராகி வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் பலமே இளைஞர்கள்தான் என்பதால் தேர்தலில் அவர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.
இதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று 130 பேரை தேர்தலில் களமிறக்க சீமான் திட்டமிட்டுள்ளார்.
தங்களது பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி இளைஞர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து இளம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 130 பேரில் 65 பேர் இளம் பெண்களாக இருப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற தேர்தலில் 117 பெண் வேட்பாளர்களும் களம் காண உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 134 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியினர் செய்து வரு கிறார்கள். அந்த மாநாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் சீமான் வெளியிட உள்ளார்.
மாநாட்டு மேடையில் இருந்தே தனது தேர்தல் பிரசாரத்தையும் சீமான் தொடங்குகிறார். இதன் பின்னர் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து சீமான் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை சட்டமன்ற தேர்தலில் காட்டி கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.