சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டரின் அப்ரூவர் கோரிக்கைக்கு சிபிஐ எதிர்ப்பு..!
- போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதால் தந்தை, மகன் உயிரிழப்பு.
- லாக்-அப் டெத் மரணம் என வழக்குப்பதிவு செய்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ்- பென்னிக்ஸ் ஆகிய தந்தை மற்றும் மகனை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் இருவரையும் கொடுமையான முறையில் தாக்கியது தெரியவந்தது. இருவரும் லாக்-அப் மரணம் அடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், தான் அப்ரூவராக மாற அனுமதித்தால் காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும், உண்மையையும் கூறுவதாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோன்று கொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.