- அரசு டவுன் பஸ்சில் மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டியபடி நீல நிறத்தில் பஸ்கள் இயங்கி வருகிறது.
- இனிவரும் புதிய பஸ்களின் முன்பு பிங்க் நிறம் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தவாசல்:
கிராமப்புறங்களில் இயக்கப்படும் தமிழக அரசின் டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
சில பஸ்களில் மகளிர் பஸ் என உள்ளது. கிராமப்புறங்களை சேர்ந்த படிக்காத பெண்கள் பிங்க் நிற அரசு பஸ்களை அடையாளம் கண்டு கட்டண மில்லா பஸ் என தெரிந்து ஏறிச் செல்கின்றனர். இப்போது நீல நிறத்தில் விடப்பட்டுள்ள புத்தம் புதிய டவுன் பஸ்களை படிக்காத பெண்கள் அடையாளம் காண முடியவில்லை. எனவே இதில் பயணிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.
கண்ணமங்கலம் படவேடு அரசு டவுன் பஸ்சில் மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டியபடி நீல நிறத்தில் பஸ்கள் இயங்கி வருகிறது.
இது கட்டண மில்லா பஸ்சா, கட்டணம் உள்ள பஸ்சா என தெரியாத பெண்கள் குழம்பி இதில் ஏறுவதில்லை. அதேபோல் வேலூர் வாழியூர் அரசு டவுன் பஸ் புதியதாக விட்ட நீல நிற பஸ், இதில் மகளிர் விடியல் பஸ் ஸ்டிக்கர் இல்லாததால் கண்ணமங்கலம், வண்ணாங்குளம் பஸ் நிறுத்தங்களில் நிற்கும் படித்த, படிக்காத பெண்கள் இதில் கட்டணம் செலுத்த வேண்டுமா? வேண்டாமா? என புரியாமல் தவித்து குழப்பமடைந்து பஸ்சில் ஏறுவதை தவிர்த்து வருகின்றனர்.
எனவே இனிவரும் புதிய பஸ்களின் முன்பு பிங்க் நிறம் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.