தமிழ்நாடு செய்திகள்

வாகன சோதனையில் அரசு பஸ்சில் ரூ.20 லட்சம் பறிமுதல் - ஒருவர் கைது

Published On 2025-05-29 10:00 IST   |   Update On 2025-05-29 10:00:00 IST
  • திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
  • போலீசார் பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கீரனூர் சோதனை சாவடியில் போலீசார் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து வெளிமாநில மதுபானம் கடத்தி வரப்படுகிறதா? என்பது குறித்து தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் பயணித்த பயணி ஒருவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் ரூ.20 லட்சம் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கோலாலம் பள்ளம் பகுதியை சேர்ந்த முகமது யூனுஸ் என்பதும், அவரிடம் ரூ.20 லட்சத்தை திருவாரூரை சேர்ந்த நபர் ஒருவர் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது.

மேலும் முகமது யூனுஸ் வீட்டிற்கு வந்து ஒருவர் குறியீடு ஒன்றை வழங்குவார் என்றும், அதனை பெற்றுக்கொண்டு அந்த நபரிடம் பணத்தை தர வேண்டும் என்றும் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து முகமதுயூனுசை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News