தமிழ்நாடு செய்திகள்

பராமரிப்பு பணிகள் முடிந்தது: பழனியில் இன்று முதல் ரோப் கார் சேவை தொடக்கம்

Published On 2025-08-20 15:01 IST   |   Update On 2025-08-20 15:01:00 IST
  • அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு ரோப் கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
  • ஒரு மாதத்திற்கு பின்பு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் அதில் ஆர்வத்துடன் பயணித்து சென்றனர்.

பழனி:

அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பராமரிப்பு பணிகள் கடந்த மாதம் 15ம் தேதி முதல் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு ரோப் கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து பொறியாளர்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக ரோப்கார் இயக்கப்பட்டது.

இன்று ரோப்கார் நிலையத்தில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின்பு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் அதில் ஆர்வத்துடன் பயணித்து சென்றனர்.

Tags:    

Similar News