துணை முதலமைச்சர் உதவியால் பாதுகாப்பாக தமிழகம் திரும்பினோம்- கபடி பயிற்சியாளர்
- வெற்றி புள்ளிகள் தொடர்பாக சிறிய மன கசப்பும், அதனை தொடர்ந்து சிறு வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
- தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
2024-25-ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அளவிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா, பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் இருந்து 36 வீராங்கனைகள் சென்றிருந்தனர். அவர்களுடன், 3 மேலாளர்கள், 3 பயிற்றுநர்கள் சென்றனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு- பீகார் இடையிலான போட்டியில் போட்டியின்போது, வெற்றி புள்ளிகள் தொடர்பாக சிறிய மன கசப்பும், அதனை தொடர்ந்து சிறு வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வீராங்கனையின் மீது தாக்குதல் நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், பயிற்சியாளர் பாண்டியராஜனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இந்த விவகாரம் தெரியவந்தவுடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உடனடியாக அங்குள்ள மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் பேசி, தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் பஞ்சாபிற்கு கபடி போட்டியில் விளையாட சென்ற தமிழக வீராங்கனைகள் தமிழகம் திரும்பினர்.
கபடி பயிற்சியாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், துணை முதலமைச்சர் உதவியால் பஞ்சாபில் இருந்து பாதுகாப்பாக தமிழகம் திரும்பி உள்ளோம். தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பற்ற சூழலில் இருந்தோம். உடனடியாக துணை முதலமைச்சர் தொடர்பு கொண்டார்.
போட்டியின்போது அருகில் டிஎஸ்பி அமர்ந்திருந்தார். துணை முதல்வர் பேசிய உடன் அவர் எங்களை நடத்தும் தன்மையே மாறியது.
நமது அணி வீராங்கனையை எதிரணியினர் தாக்க முயற்சித்தபோது தற்காப்புக்காக தமிழக வீராங்கனைகள் தாக்கினர். துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டால் பத்திரமாக காக்கப்பட்டோம்.
உடனடியாக டெல்லி அழைத்து வந்து தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்து தற்போது சென்னை அழைத்து வரப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
தமிழக கபடி பயிற்சியாளரை தனியாக அழைத்து சென்றும் தாக்கியதாக வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.