ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது
- 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம்.
- 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 7 மீனவர்களும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மீனவர்கள் 7 பேரையும் வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 7 மீனவர்களும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமை தாங்கினார். இதில் மீனவ சங்க பிரதிநிதிகள் எமரிட், சகாயம், கிளாட்வின் ஆல்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைதான அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு கொண்டுவர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவதற்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் பாரம்பரிய கடல் பகுதியில் எந்த பிரச்சினையும் இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த எம்.பி.க்களும் மீனவர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் 19-ந்தேதி தங்கச்சிமடத்தில் மதியம் 3 மணியளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் மீனவர்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமையில், இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மீனவர்களின் குடும்பத்தினர், கலெக்டரிடம் சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு கொண்டுவர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பும், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.