தமிழ்நாடு செய்திகள்

இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் - பெரியார் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

Published On 2025-09-17 10:23 IST   |   Update On 2025-09-17 10:23:00 IST
  • தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
  • தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டிவனம்:

வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பா.ம.க.வில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு அவரது நினைவிடங்களில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

தற்போது தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் ஒரு பகுதியாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு அங்குள்ள அரசியல் பயிலரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 21 பேரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேராசிரியர் தீரன், பு.தா அருள்மொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சித்தணி, பாப்பம்பட்டு, பனையபுரம் , கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தூண்களில் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்துகிறார்.

Tags:    

Similar News