துணை வேந்தர்கள் மாநாடு விவகாரம் அரசுடன் அதிகார மோதல் இல்லை- ஆளுநர் மாளிகை விளக்கம்
- கவர்னர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
- மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை:
பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில் ஊட்டியில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் அதிகார மோதல் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை. ஆளுநர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு வருடமும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இந்த ஆண்டும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கின. மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
2022 முதல் துணை வேந்தர் மாநாட்டை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடத்தி வருகிறார். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் தவறாக இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார போராட்டமாக முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். இவை அனைத்தும் தவறானது. உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.