மார்ச் மாத இறுதிக்குள் படுக்கை வசதி கொண்ட 8 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு- ரெயில்வே அதிகாரிகள்
- இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
- வரும் ஜனவரி மாதம் 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
சென்னை:
சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது. இதுவரையில், இந்தியா முழுவதும் 92 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரெயில்கள் இருக்கை வசதி கொண்டதாக இருப்பதால் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
எனவே, இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தில், கடந்த ஆண்டு முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணிகள் நடைபெற்றது. பின்னர், ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டுவரப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல, 2-வது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணிகள் முடிந்து தற்போது ஆமதாபாத்தில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் சேவைகளும் வரும் ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதேபோல, வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 8 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
வரும் ஜனவரி மாதம் 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரெயிலின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் மார்ச் மாத இறுதிக்குள் கூடுதலாக 8 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தேவைக்கேற்ப ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணி நடைபெறும். இதேபோல, பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கன்னியாகுமரி வரையில் ஒரு படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வாறு கூறினார்கள்.