திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு - தனியார் வானிலை ஆய்வாளர்
- காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளது.
- காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மழை தொடர்பாக அவர் கூறியதாவது:
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட வட கடலோர, வட தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வட தமிழக மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலையில் இன்று பிற்பகல் வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாலை தீபம் ஏற்றும் நேரத்தில் மழையின் தீவிரம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.