தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் யார் யாருக்கு கிரகணம் பிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2025-09-08 10:38 IST   |   Update On 2025-09-08 10:38:00 IST
  • மக்களிடம் தே.மு.தி.க.விற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.
  • தே.மு.தி.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

திருவாரூர்:

"உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் தே.மு.தி.க. பிரசாரத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி உள்ளார்.

இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக விஜயகாந்த் நினைவாக கேப்டன் ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி  திருவாரூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரசார பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் ரோடுஷோ மேற்கொண்டார். இதில் அவர் கடைவீதி, நேதாஜி ரோடு, கீழவீதி வரை நடந்து சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் தே.மு.தி.க. தொண்டர்கள், பெண்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

மேலும் பெண்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் முரசை அடித்து தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கொண்டிருக்கிறோம்.

அங்கெல்லாம் மக்களிடம் தே.மு.தி.க.விற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.

வருகிற 2026-ம் ஆண்டு தே.மு.தி.க.விற்கான காலம். அப்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து வெற்றி பெறுவோம்.

கேப்டன் விஜயகாந்த் நம்முடன் தான் இருக்கிறார். நம்முடைய உணர்விலும், உள்ளத்திலும் என்றும் இருக்கிறார். அவரது சொத்து தமிழக மக்கள் தான். சந்திரகிரகணம் இன்று இரவு (அதாவது நேற்று) பிடிக்கிறது என்கிறார்கள்.

அதுபோல் அரசியலில் யார் யாருக்கு கிரகணம் பிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தே.மு.தி.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. 2026-ல் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்பார்கள்.

வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

திருவாரூருக்கு நான் வந்தவுடன் பொதுமக்கள் நேரடியாக என்னிடம் வந்து ரோடு வசதி இல்லை, ரெயில் வசதி இல்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இவையெல்லாம் 2026-ல் களையப்படும். இன்றிலிருந்து தே.மு.தி.க.வின் 2.0 கவுண்ட்டவுன் ஆரம்பித்து விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News