போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட போலீஸ்காரரின் காருக்கு அபராதம்- பெண் போலீஸ்காரர் நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள்
- காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
- பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ராக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் தினேஷ். இவர் புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக தனக்கு சொந்தமான காரில் வந்தார்.
காரை வேறு ஒரு டிரைவர் ஓட்டினார். தினேஷ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட நிலையில் டிரைவர் அந்த காரை போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் கார் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
பொதுமக்கள் சத்தம் போட்டும் அந்த காரில் இருந்த டிரைவர் வாகனத்தை விட்டு இறங்காமல் இருந்ததோடு, வாகனத்தை நகர்த்தாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் கஸ்தூரி அங்கு வந்தார். காரை எடுக்க சொல்லி கஸ்தூரி வற்புறுத்தினார். அதற்கு இது போலீஸ்காரர் கார் என்று டிரைவர் கூறியதாக தெரிகிறது.
உடனே பெண்போலீஸ் காயத்ரி யார் காராக இருந்தாலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியது தவறு என கூறி 2 பிரிவுகளில் அந்த வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார். அந்த காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் இருந்தபோதிலும் தனது கடமையில், கருத்தாக செயல்பட்டு பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால் அந்த பெண் போலீஸ் காயத்ரிக்குக்கு பாராட்டுகள் குவிகிறது. விழா முடிந்து வந்த போலீஸ்காரர் தினேஷ் தனது டிரைவரை கண்டித்தார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.